மூலம் :- செம்பருத்தி
Tuesday, February 22, 2011 10:23 am
கெடா, லுனாசில் இண்டர்லோக் நாவல் குறித்து நடந்த கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கட்சியின் தலைவர்களும் இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டது மனித அடிப்படை உரிமைக்கு புறம்பானது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகள் ஆனப்பிறகும், ஒரு மனிதன் தனது உணர்வை வெளிப்படுத்த மலேசியாவில் உரிமை வழங்கப்படாமல் இருப்பது மிக வேடிக்கையாக இருக்கிறது என்றார் சார்ல்ஸ்.
தனது குரலை எழுப்புவது, ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையாகும்.அதிலும் மனித உரிமைக் கட்சி நடத்தியது ஒரு கருத்தரங்கம். இண்டர்லோக் நாவலுக்கு எதிரான கருத்தரங்கம் ஆகும். நாட்டில் கருத்தரங்கம் நடத்தக் கூட உரிமை இல்லையா? என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.
இந்தியர்களின் உரிமை பறிபோகிறது என கூறிய சார்ல்ஸ் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனது கருத்தை தெரிவிக்க, பேசும் உரிமை உள்ளதை சுட்டிக் காட்டினார்.
இண்டர்லோக் எதிராக கருத்தரங்கம் செய்த மனித உரிமைக் கட்சியினர்களை கருத்தரங்கத்தை நடத்த விடாமல், கைது செய்தது ஒட்டு மொத்த இந்தியர்களின் உரிமையை சேர்த்து பரிப்பதேயாகும். ஜனநாயக நாடு என்று வார்த்தையால் சொல்லிக் கொண்டு இப்படி அவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
இண்டர்லோக் நாவலுக்கு எதிராக பல இந்தியர்கள் தடைவிதித்திருந்தும் அதற்கு இணக்கம் காட்டாமல், இந்தியர்களின் கருத்தையும் எண்ணத்தையும் சிறிதும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருக்கிறது அரசாங்கம்.
ஏற்கனவே, இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் பல இந்தியர்களை கோபத்திற்கு உள்ளாகிருக்கும் அரசாங்கம் தற்போது மனித உரிமை கட்சியினரை கைது செய்து மேலும் பல இந்தியர்களின் கோபத்தையும் ஆவேசத்தையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியர்களின் பிரச்னையை மிக துள்ளியமாக தீர்க்க வேண்டிய அரசாங்கம் ஏன் அமைதி காத்து காலம் தாழ்த்தி வருகிறது என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.
சர்ச்சைக் குரிய அந்நாவாலை ஆரம்பத்திலே தடை செய்திருந்தால் இவ்வாறான நடவடிக்கைகளில் மனித உரிமைக் கட்சியினரும் இந்திய சமுதாயமும் இறங்க மாட்டார்கள் அல்லவா?
ஆக, நாடு அமைதியாய் இருப்பது அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. ஆதலால் முதலில் மனிதனின் முக்கியமாக இந்தியர்களின் உணர்ச்சியை புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும்; மனித அடிப்படை உரிமைகளை காக்க வேண்டும் என சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.

Tiada ulasan:
Catat Ulasan